இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவில் தொடரும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக, நேற்று நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. பயணிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் இன்றித் தவிப்பதாகவும், கவுண்டர்கள் காலியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகள் ஆத்திரமடைந்து கோஷங்களை எழுப்பினர். ஹைதராபாத்தில் ஒரு குழுவினர் ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னையில் CISF இண்டிகோ பயணிகளை உள்ளே அனுமதிக்காததால் நூற்றுக்கணக்கானோர் வெளியே தவிக்கின்றனர். விசாகப்பட்டினத்தில் 92-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் புதிய விமான பணி நேர வரம்புகள் (FDTL) ஆகியவற்றால் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாக நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமான ரத்துகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 8 முதல் விமான செயல்பாடுகளை குறைக்கவுள்ளதாகவும் இண்டிகோ எச்சரித்துள்ளது.