அமெரிக்க மாடல் எனக்கூறி சுமார் 700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, பணம் கேட்டு மிரட்டியதாக டெல்லியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 23 வயது துஷார் சிங் என்பவர் தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் டேட்டிங் செயலியின் மூலம் இளம்பெண்களை குறி வைத்து, பணம் பறிக்க திட்டமிட்டார்.
இதற்காக அவர் ஆன்லைன் டேட்டிங் செயலியில் போலி கணக்குகளை தொடங்கி, 18 முதல் 30 வயது வரை உள்ள பெண்களிடம் அறிமுகமானார். தன்னை ஒரு அமெரிக்க மாடல் என்றும், திருமணம் செய்வதற்காக பெண் தேடி இந்தியா வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி, பல இளம் பெண்கள் அவரின் கபட வளையத்தில் விழுந்தனர்.
அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு, அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டுள்ளார். பல பெண்கள் அவருக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய பின்னர், அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு, அவர்களிடம் மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார்.
இது குறித்து டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்த நிலையில், துஷார் சிங்கை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை 700 பெண்களிடம் தனது கைவரிசையை அவர் காட்டி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.