போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாக சென்னையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் டிஐஜியை, சைபர் க்ரைம் போலீஸ் என்ற பெயரில் குற்றவாளி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் கிரைம் போலீசாரின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் போலீஸ் டிஐஜி விஜயலட்சுமி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், "உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் அடங்கிய பார்சல் இலங்கையில் இருந்து வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும்," என்று கூறி மிரட்டியுள்ளார்.
தன்னை மிரட்டியவர் மோசடி நபர் என்பதை சில நொடிகளில் புரிந்து கொண்ட டிஐஜி, உடனே அந்த நபரின் விவரங்களை கேட்டார். இதைக் கேட்ட உடனேயே, அந்த நபர் சுதாரித்துக் கொண்டு போனை துண்டித்தார்.
இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் டிஐஜி விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார், பேசிய செல்போன் எண் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.