Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய பட்ஜெட்: காரிருளும் ஒரு நம்பிக்கையும்

மத்திய பட்ஜெட்: காரிருளும் ஒரு நம்பிக்கையும்
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:45 IST)
பெருந்தொற்று சேதத்தில் இருந்து வாக்சின் நம்பிக்கையால் நாடு மீண்டுவரும் வேளையில், தனது மூன்றாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாஜக கூட்டணி அரசின் ஒன்பதாவது பட்ஜெட்டாக, ஒரு பைல் சில தாள்கள் என்று பட்ஜெட் உரை சுருக்கமாகவே இருந்தது. அமைச்சரும் 1.50மணி நேரத்தில் தனது உரையை முடித்துக்கொண்டார்.

திருக்குறளை மேற்கோள் காட்டிய அமைச்சர், 2021பட்ஜெட் ஆறு தூண்களால் கட்டமைக்கப்பட்டது என்றார். 1.சுகாதாரம் மற்றும் நலவாழ்வு, 2.உழைப்பு,மூலதனம் மற்றும் அடிப்படைக்கட்டமைப்பு, 3.இந்தியா ஜொலிப்பதற்கான ஒருங்கிணைந்த மேம்பாடு, 4.மனிதவள ஒருங்கிணைப்பு, 5.புதுமைப்படுத்துதல், ஆராய்ச்சிமற்றும் மேம்பாடு, 6.அரசுகுறைவாகவும், நிர்வாகம் மேலதிகமாகவும் இருத்தல் என்ற ஆறு தூண்களை அவர் முன்மொழிந்தார்.

மத்திய அரசின் தற்போதைய முழக்கமான தற்சார்பு பொருளாதாரம் இந்தியாவில் வளரவும், உலகநாடுகளில் இந்தியா வல்லரசாகவும் திட்டங்கள் மட்டும் போதாது.  அரசின் சட்டதிட்டங்களை முழுமனதோடு வரவேற்று இதயசுத்தியுடன் பின்பற்றும் மக்களும் வேண்டும். பின்பற்றும் மக்களை கொண்டாடும் வழக்கமும் அரசுக்கு வேண்டும்.

டிஜிட்டல் இந்தியாவில், டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது அதனை வரவேற்று பின்பற்றிய மக்களுக்குத்தான் ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனங்களுக்கு ரூ.1500கோடி சலுகை மக்களுக்கு ஏமாற்றமே.

பட்ஜெட்டுக்கு முந்தைய வாரம் நடைபெற்ற ஒரு ஆய்வில், நிதிப்பற்றாக்குறை, வேலையின்மை ஆகியவை இந்த பட்ஜெட்டின் பெரும் சவால்கள் எனத்தெரியவந்தது. நிதிப்பற்றாக்குறையை போக்க பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று சமாளிக்கலாம்.
புதியவேலை வாய்ப்புகளை உருவாக்க, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், அவற்றில் முதலீடு செய்வோருக்கு ஓராண்டு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் திறன், அனுபவமிக்கவர்கள் இந்தியாவில் தொழில் துவங்க ஒருநபர் கம்பெனிகளை அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
 
webdunia

உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இப்போதைக்கு ரேஷன் மட்டும்தான் என்றவகையிலேயே பட்ஜெட் அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது. அமைப்புசார்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் என அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கொரானோ பாதிப்பினால் சம்பளம் இன்றியும், சம்பளக்குறைப்பிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு வெளிச்சம் தரும் அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமே.

சில மாநிலங்களில் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் மூலம் வெளியூர் சென்று திரும்பிய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அத்திட்டத்தின் செலவுத்தொகை ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றைய பட்ஜெட்டில் அத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 73ஆயிரம் கோடி என்றளவில் உள்ளது.

சுகாதாரம் நலவாழ்வை உறுதி செய்யும் வகையில், ரூ.64,180கோடி வரும் ஆறு ஆண்டுகளில் ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் கூறுகிறது. மேலும், கொரோனா வாக்சினுக்காக மட்டும் ரூ.35ஆயிரம் கோடி ஒதுக்கப்பட உள்ளது.

உள்நாட்டில் மட்டுமின்றி சுமார் நூறு நாடுகளுக்கு வாக்சின் சப்ளை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி பாகிஸ்தானிற்கும் இந்தியாவின் வாக்சின் சப்ளை செய்யப்பட உள்ளது.  பிரதமர் திரட்டிய சிறப்பு நிதி முழுவதும் கொரோனா சார்ந்த பணிகளுக்கு செலவிட்டுள்ள நிலையில், பட்ஜெட்டிலும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
webdunia

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காள மாநிலங்களில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வருமானவரி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, வீடுகட்டுவோருக்கான வரிக்கழிவுத்தொகையை தொடர்ந்து அனுமதிப்பது,  வரித்தாக்கல் நடைமுறைகளை எளிமைப்படுத்தியது, வரி மறுஆய்வுக்கான உச்சவரம்பு, காலம் இவற்றில் செய்யப்பட்ட மாற்றம் வரவேற்கத்தக்கது.

75வயதானோர் வரித்தாக்கல் செய்யவேண்டாம் என்ற சலுகையை 60வயதாக குறைத்திருக்க வேண்டும். குறிப்பாக 55வயதில் இருந்து பெண்களுக்கு இச்சலுகை நடைமுறைக்கு வந்தால் ஏழைப்பெண்கள், தனித்துவசிப்போருக்கு மிக உதவியாக இருக்கும்.

காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு முதலீடுகளின் உச்சவரம்பு அதிகரிப்பு,  அரசு, பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்று நிதிதிரட்ட திட்டம், வெளிநாட்டினர் தொழில்துவங்க சலுகைத்திட்டம் போன்றவற்றால் பங்குச்சந்தையில் இன்று காளை குத்தாட்டமிட்டது. சென்செக்ஸ் புள்ளிகள் 5% உயர்ந்து 50ஆயிரம் தொட ஆயத்தமானது. நிப்டியும் 646 புள்ளிகள் உயர்ந்தது.

நாடு முழுவதும் போராடிவரும் விவசாயிகளும் பட்ஜெட்டில் தங்களுக்கு அறிவிப்புகள் ஏதும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். விவசாய செஸ் வரி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50, டீசல் மீதுலிட்டருக்கு ரூ.4 என்று விதிக்கப்பட்டுள்ளதில் டிராக்டர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்.

எக்சைஸ்வரி, சிறப்பு எக்சைஸ்வரி என்று பெட்ரோலிய பொருட்கள் மீது ஏற்கனவே வரிகள் அதிகம். தற்போது விதிக்கப்படும் வரி சரக்கு போக்குவரத்தையும் பாதித்து விலைவாசியையும் உயர்த்த வாய்ப்புள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டது போன்று, நம்பிக்கை ஒளி பிறக்கும் என்று இரவில் பறவைகள் பறப்பது போன்று மேலும் ஒரு நிதியாண்டை நம்பிக்கையுடன் மிஸ்டர் பொதுஜனம் கடக்க தயாராகிவிட்டார்.

ஜி.ஸ்ரீமாரிச்செல்வம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது கோரிக்கையை ஏற்று பட்ஜெட்டில் அதை இணைத்ததற்கு நன்றி! – முதல்வர் பழனிசாமி