ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா பகுதியில் சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. இதில் அடில் ஹுசைன் தோகர், ஆசிப் ஷேக் ஆகிய இருவரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மூன்றாவது நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் அடில் ஹுசைனின் வீடு மற்றும் புல்வாமா மாவட்டம் டிராலில் உள்ள ஆசிப் ஷேக்கின் வீடுகளை ராணுவம் சோதனை செய்தது. அதன் பின்னர் இரண்டும் வெடிகுண்டுகள் மூலம் முற்றிலும் இடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பந்திபோரா பகுதியில் நடைபெற்ற நடவடிக்கையில், லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அல்தாஃப் லல்லி ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார்.