ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 22ஆம் தேதி பெஹல்காம் பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இந்துக்கள் என அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், இந்திய வான்வழி பாதையை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை என நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான தகவல் விமானத்துறைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.