அட்சய திருதியையை முன்னிட்டு, செல்வம் சேரும் நாளாக நம்பப்படும் இந்த நாளில், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க விரும்பி மக்கள் அதிகளவில் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், ஒரு சவரன் ரூ.71,840 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.111 என நிர்ணயிக்கப்பட்டதுடன், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000 க்கு விற்பனையானது.
அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமும், செல்வ வளமும் கூடும் என்ற நம்பிக்கையால், மக்கள் அதிகாலையிலிருந்தே நகைக்கடைகளில் தங்கம் வாங்க வரிசைக்கட்டி நிற்கிறார்கள்.
இவ்வாண்டு தங்க விலை கடுமையாக உயர்ந்தாலும், விற்பனை மீது எந்த பாதிப்பும் காணப்படவில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தைவிட, இந்த வருடம் தங்க விற்பனையில் புதிய சாதனை நடைபெறும் என நம்பப்படுகிறது.
தங்கத்தின் விலை இப்போது புதிய உச்சங்களை தொட்டிருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் ஆர்வத்தில் குறைவு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.