இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம், எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளருக்கு எதிராக, 'இந்தியா' கூட்டணி சார்பில் தனி வேட்பாளரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொருத்தமான வேட்பாளரை தேர்வு செய்வதற்கான இறுதி அதிகாரம் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். எனவே, அதற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக, 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.