உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த குற்றத்திற்காக பிடிபட்ட நடிகை ரன்யா ராவ் மீது விசாரணை நடந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கன்னட நடிகையான ரன்யா ராவ் சமீபத்தில் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தபோது விமான நிலையத்தில் பிடிபட்டார். அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பலமுறை இவ்வாறு தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ரன்யா ராவ் மீது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்துவதற்காகவே துபாயில் ஒரு நகைக்கடையையே நடத்தி வந்துள்ளார். இதில் 50 சதவீதம் முதலீடு செய்து கூட்டாளியாக இருந்தவர் கன்னட நடிகர் தருண் ராஜூ. வெளிநாட்டு கரன்சியை பயன்படுத்தி தங்கம் வாங்கி அதை கடத்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு தங்க வியாபாரியிடம் ரூ.1.70 கோடி பணத்தை ரன்யா ஏமாந்ததாகவும் கைதான தருண் ராஜூ கூறியுள்ளார். மேலும் ரன்யா ராவ் பாஸ்போர், வங்கி பரிவர்த்தணை போன்றவற்றை ஆராய்ந்ததில் சுவிட்சர்லாந்து, ஜெனிவா நாடுகளுக்கு அடிக்கடி பயணித்ததும், பாங்காக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தங்க வியாபாரிகளோடு தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கியில் இவர் தங்க கடத்தலில் ஈட்டிய பெருவாரியான பணத்தை வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த தங்க கடத்தலுக்கு பின்னால் சர்வதேச அளவில் பல மாஃபியாக்களின் பங்கு உள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து தங்க கடத்தலுக்கு பின்னால் உள்ள முக்கிய புள்ளிகளை பிடிக்க விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
Edit by Prasanth.K