வேலை தேடும் இளைஞர் ஒருவர் பாதி மட்டுமே அச்சடிக்கப்பட்ட ரெஸ்யூமை சமர்ப்பித்த நிலையில், "எனது முழு திறமையையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னை வேலைக்கு அமர்த்துங்கள்" என்று அதில் குறிப்பிட்டிருந்தது, இணையவாசிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு வேலை கேட்டு விண்ணப்பம் செய்த அந்த இளைஞர், தன்னுடைய ரெஸ்யூமில் ஒரு பக்கத்தை மட்டுமே நிரப்பியுள்ளதாகவும், "என்னுடைய முழுத் திறனையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னை பணியில் அமருங்கள்" என்றும் குறிப்பு எழுதி உள்ளார். அவரது தகுதிகள் மற்றும் அனுபவத்தை பட்டியலிடுவதற்கு பதிலாக, ஒரு கவர்ச்சியான செய்தியை மட்டும் பதிவு செய்துள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். "அவருக்கு வேலை கிடைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை" என்று சிலர் கூறினர். ஆனால், சிலர் அவருடைய புத்திசாலித்தனத்தைப் பாராட்டினர். "இது மிகவும் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக உள்ளது. நான் வேலைக்கு எடுப்பவராக இருந்தால், கண்டிப்பாக அவருக்கு 100% நேர்காணலுக்கு அழைப்பு விடுப்பேன்" என்று ஒருவர் தெரிவித்தார்.
"உங்களை அந்த நிறுவனம் ஒருவேளை வேலைக்கு பணியமர்த்தாமல் இருக்கலாம், ஆனால் உங்களுடைய குறிப்பு இன்று இந்தியா முழுவதும் பரவிவிட்டது" என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார். இந்த ரெஸ்யூம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.