திருப்பதியில் தங்க ஏடிஎம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் மூலம் தங்க வடிவில் வெங்கடாஜலபதி டாலரை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் தற்போது சர்வதேச கோயில் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தான் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களில் தங்க டாலர்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், முதல் கட்டமாக வெங்கடேஸ்வரர் மற்றும் கோவிந்தராஜ சுவாமி வடிவில் தங்க டாலர்களை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுப்பது போல், இந்த ஏடிஎம்மில் தங்க டாலரை பெற்றுக்கொள்ளலாம். திருப்பதியில் முதல் தங்க ஏடிஎம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மக்கள் எடுத்து கொள்ளும் வசதி கொண்டிருப்பதால், இதற்கு ஏராளமான ஆதரவு குவிந்து வருகிறது.
கோல்ட்ஸிக்கா என்ற நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்க ஏடிஎம் நிறுவி உள்ளது. இதன் மூலம், தங்க நகைகளை வாங்க கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், ஏடிஎம் மூலமாக பெற முடியும். இந்த ஏடிஎம்மை நாடு முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக, தற்போது திருப்பதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், மேலும் பல நகரங்களில் இந்த ஏடிஎம்களை கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.