திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில், கேரள மாநிலத்தின் குருவாயூர் அருகே அமைந்துள்ள ஒரு பிரசித்திபெற்ற தெய்வீகத் தலம். இத்திருக்கோவில் 'கேரள திருப்பதி' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில், மூலவராக வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். அவர், ஆந்திர மாநிலத்தின் திருமலை-திருப்பதியில் வழிபடப்படும் வெங்கடேஸ்வர பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறார்.
இந்த திருக்கோவில், குருவாயூரில் உள்ள திருவேங்கடம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான கேரளக் கோவில்கள் போன்றே, இக்கோவிலும், அதன் இருப்பிடத்தின் பெயரையே பெற்றுள்ளது. இந்த பகுதி மக்களுக்கு, இத்தலத்தில் விளங்கும் வெங்கடாஜலபதி பெருமாள் மிகுந்த அருள்தரும் தெய்வமாக போற்றப்படுகிறார். இதனால், இத்திருக்கோவில் 'கேரள திருப்பதி' என வழங்கப்படுகிறது.
1977ஆம் ஆண்டில், திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இருந்து, இத்தலத்தின் மூலவராக புதிய வெங்கடாஜலபதி திருவுருவம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், அனைத்து விதமான சமய சம்பிரதாயங்களையும் பின்பற்றி, முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவிலில், கேரளா பாணியில் வழிபாட்டு முறைகள் அனுசரிக்கப்படுகின்றன.
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் முதன்மை அர்ச்சகர், இந்த கோவிலின் பூஜைகளை மேற்கொள்கிறார்.
தினசரி காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையும், பக்தர்களுக்கு தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது.
திருவேங்கிடம் வெங்கடாஜலபதி கோவில், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலிலிருந்து, கிழக்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.