இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ரயில் விபத்துக்கள் நடந்து வரும் வகையில், ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்தி ரயில் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில் செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே, ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைத்து மீண்டும் ரயிலை இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.