மகாராஷ்டிராவின் பாலாக்கர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மதுகர் பாபுராவ் பாட்டீல், பருவமழை தவறியதால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக அரசு இழப்பீடாக தனது வங்கி கணக்கில் ரூ.2.30 மட்டுமே வரவு வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த ஆண்டு பிரீமியம் செலுத்திய நிலையில், தனது 2.51 ஹெக்டேர் நெல் பயிர் முழுவதுமாக அழுகிவிட்டதால், பெரும் இழப்பீட்டிற்கு தான் தகுதியுடையவர் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். ஆயினும், பாலாக்கர் மாவட்ட வேளாண்மை அதிகாரி நீலேஷ் பாகேஷ்வர் இதை 'தொழில்நுட்பக் கோளாறு' என்று விளக்கம் அளித்துள்ளார்.
விவசாயி பாட்டீல் 2023 கரீஃப் பருவ நெல் இழப்பீடாக மொத்தமாக ரூ.72,466 பெற வேண்டியிருந்தார். அதில், அவர் ஏற்கனவே மே 2024-இல் ரூ.72,464 பெற்றுவிட்டார். மீதமுள்ள ₹2.30 பைசா மட்டுமே சமீபத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், இது புதிய இழப்பீடு அல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிக்கு இந்த விவரங்கள் விளக்கப்பட்டுள்ளதாகவும், எழுத்துபூர்வ உறுதிமொழி பெறப்பட இருப்பதாகவும் அதிகாரி கூறியுள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த சம்பவத்தை ஒரு 'கேலிக்கூத்து' என்று விமர்சித்துள்ளார்.