அரசு வழங்கும் எருமை மாடு உள்ளிட்ட சில பரிசுப் பொருட்களுக்காக போலியாக திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வரின் திருமணத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு எருமை மாடுகள் உள்ளிட்ட சில பொருட்களை அரசு வழங்குகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே திருமணமான ஒரு பெண், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ35,000 பணத்திற்காக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
இரண்டாவது திருமணம் செய்யப்போகும் புதிய மணமகனுடன் ஒப்பந்தம் செய்து, திருமணத்தின் மூலம் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு புதிய மணமகனும் ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தகவல் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்ததால், இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் அந்த போலி ஜோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பணம் மற்றும் எருமை மாட்டிற்காக இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண் தற்போது சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.