தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஜோதி ஸ்ரவன் சாய், காதலியின் குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மைசம்மாகுடாவில் உள்ள கல்லூரியில் பி.டெக். படித்து வந்த ஸ்ரவன் சாய்க்கும், பீராம்குடாவை சேர்ந்த ஸ்ரீஜா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் இருந்தது. இந்த காதலுக்கு ஸ்ரீஜாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரவனை பலமுறை எச்சரித்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று, திருமணம் குறித்து பேசுவதாகக் கூறி ஸ்ரீஜாவின் பெற்றோர் ஸ்ரவனை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அவர் அங்கு வந்ததும், ஸ்ரீஜாவின் தாயார் உட்பட குடும்பத்தினர் அவரை கிரிக்கெட் மட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஸ்ரவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமீன்பூர் போலீஸார் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பேட்டை கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.