நாட்டின் பல பகுதிகளில் போதை விருந்து கலாச்சாரம் தலைதூக்கி வரும் நிலையில் தெலுங்கானாவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், முக்கியமாக பெரு நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் பலரை திரட்டி ரகசிய போதை விருந்து நடத்துவதும், அதில் பல சட்டவிரோத செயல்கள் நடப்பதும் சமீபமாக செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படியான சம்பவம் தெலுங்கானாவிலும் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பலர் சேர்ந்து போதைப்பொருள் விருந்து நடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி வளைத்து அங்கிருந்த 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதில் 22 பேர் 18 வயது கூட நிரம்பாத சிறுமிகளாக இருந்தது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் போதை பயன்பாடு சோதனை நடத்தியதில், இருவர் கஞ்சா புகைத்திருந்ததும், மற்ற அனைவரும் மது அருந்தியிருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த போதை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கனடாவை சேர்ந்த இஷான் என்பவர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K