ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரகசியமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கும்பல், ராஜஸ்தானில் ஒரு போதைப்பொருள் உற்பத்தி ஆய்வகத்தை நடத்தி வந்துள்ளது. வெளியிலிருந்து பார்க்கும்போது அது ஒரு சாதாரண எருமை தொழுவம் போல் இருந்துள்ளது. ஆனால், அதன் உள்ளே ரகசியமாக அமைக்கப்பட்ட அறையில், அதிநவீன உபகரணங்களை கொண்டு போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தக் கும்பல் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் ரசாயனங்களையும் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சோதனையின்போது, மெஃபெட்ரோன் மற்றும் கெட்டமைன் தூள், திரவ கெட்டமைன் மற்றும் பிற முக்கியமான ரசாயனங்கள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலக் காவல்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியே இந்த கும்பல் பிடிபட்டதற்குக் காரணம்.