பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் இப்போதே சுறுசுறுப்பாகி உள்ளன.
இந்த சூழலில், ஒரு ஊடகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 36 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சதவீத வாக்குகள் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான கட்சிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று, பீகார் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையில், இந்தியா எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்டவை பீகார் மக்களிடம் பாஜகவுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளன என்றும், இது வாக்காக மாறும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது காத்திருக்க வேண்டிய விஷயமாகும்.