தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள பிரபல விஷால் மெகா மார்ட் வணிக வளாகத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயணைப்புத் துறை அளித்த தகவலின்படி, தீ விபத்தின்போது லிஃப்ட்டில் சிக்கிக்கொண்டதாலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
முதற்கட்டத் தகவலின்படி, நேற்று மாலை சுமார் 6:44 மணியளவில் கட்டிடத்தின் முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து தொடங்கியுள்ளது. முதலில் கடையில் இருந்த ஊழியர்கள், அங்கிருந்த தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் மிக விரைவாக கடை முழுவதும் பரவியதால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
சுமார் இரவு 9 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் தான் லிப்டில் சிக்கிய ஒருவர் உயிரிழந்த தகவல் தெரிந்தது. தீ விபத்தின்போது திடீரென நடுவில் லிப்ட் நின்றதால் அதில் இருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே நேற்று முன் தினம் டெல்லியில் உள்ள AIIMS டிராமா சென்டர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது பெரும் சேதமோ ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதலான செய்தி.