காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் 38 வயது தலித் இளைஞர் ஹரியோம் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் கூற்றுப்படி, மனநலம் பாதிக்கப்பட்ட ஹரியோமை, வீடுகளில் திருட 'ட்ரோன் மூலம் குறி வைக்கும் கும்பலை' சேர்ந்தவர் என்று தவறுதலாக நினைத்து ஒரு கும்பல் பெல்ட் மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின் கடமையில் அலட்சியம் காட்டியதாக கூறி, ஊஞ்சாஹார் காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்த கும்பலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.