மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரது வீடுகளில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத கார் இறக்குமதி தொடர்பான புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, பூடான் ராணுவம் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களை ஏலம் விட்டது. அவற்றில் 37 கார்கள் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கார்களில் 20 வாகனங்கள் கேரளத்துக்குள் வந்ததாகவும், அவற்றை துல்கர் சல்மான், பிருத்விராஜ் உட்பட சிலர் வாங்கியதாகவும் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கார் வாங்கியதற்கான ஆவணங்களையும், வரி தொடர்பான விவரங்களையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கேரளத்தில் சுமார் 30 இடங்களில் இது தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருவதால், இந்த விவகாரம் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.