கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கேரளாவில் மேலும் 300 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,341 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட கோவிட்-பாசிட்டிவ் மாதிரிகளில் 21 பேருக்கு ஜே.என்.1 வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோவாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயது நபருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு லேசான பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது எனவும், அதேசமயம் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.