புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 25 முதல் மே 30 வரை மூன்று கட்டங்களில் போராட்டம் நடைபெறும். முதலில், மாநில அளவில் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் வீட்டுக்கு வீடு பிரச்சாரம் நடைபெறும். அதன் பின்னர், மாவட்டங்களிலும், 4,500 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த பிரச்சாரம் தொடரும். இறுதியாக, மே 20 முதல் 30 வரை வீடு வீடாக சென்றும் மக்களை தொடர்புகொண்டு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பாஜக அரசு அமலாக்க இயக்குநரகத்தை அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்துகிறது. இது சட்டவழி பிரச்சனை அல்ல, அரசியல் தாக்குதலாகும்,” என்றார்.
நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் பாஜக தரப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்த்து, ஏப்ரல் 21 முதல் 24 வரை பல நகரங்களில் காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த உள்ளது.
சாதி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு வரம்பை நீக்குதல், விவசாய கடன் தள்ளுபடி போன்றவை. சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என கூறப்பட்டுள்ளது.