நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட யங் இந்தியா நிறுவனத்தின் வசத்தில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை சார்ந்ததாக கூறப்படும் பண மோசடி விவகாரத்தில், ரூ.751.9 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
இந்த 'யங் இந்தியா' நிறுவனத்தின் இயக்குநர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருந்ததுடன், அவர்களுக்குத் தலா 38 சதவிகித பங்குகள் இருந்தன. 2012 ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல். (AJL) நிறுவனம் யங் இந்தியாயை கைப்பற்றியது. இதில் முறைகேடு நடந்ததாகக் கருதி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இதுகுறித்து தனிப்பட்ட விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது இன்று அதிகாரப்பூர்வமாக குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.