லடாக்கில் நேற்று நடந்த பெரும் வன்முறைக்கு காரணமாக காங்கிரஸ் கவுன்சிலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு கோரி கடந்த 15 நாட்களாக சோனம் வாங்க்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். நேற்று வன்முறை வெடித்ததை அடுத்து, அவர் தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சோனம் வாங்க்சுக் தனது பேச்சுகளில் நேபாளத்தில் நடந்த 'Gen Z' போராட்டங்களை குறிப்பிட்டு மக்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் தூண்டுதலால் ஆத்திரமடைந்த கூட்டம், பாஜக அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வன்முறையின்போது, கலவர கும்பலில் காங்கிரஸ் கவுன்சிலர் ஃபுன்ட்சோக் ஸ்டான்சின் செபாக் ஈடுபட்டதாக கூறி, பாஜக அவரை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, அவர் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
வன்முறையை அடுத்து, லே மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர் காவல்துறை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.