நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்த 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்தை உட்கொண்டதால் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகள் 24 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு குழந்தைகள் (ஒரு மூன்றரை வயது மற்றும் ஒன்பது மாத குழந்தை) நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுநீரக செயலிழப்பால் நேற்று உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு சம்பந்தப்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 61 வயது பெண் வேதியியல் ஆய்வாளரைத் தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது.
ஏற்கெனவே நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடைபெறும் இரண்டாவது கைது இதுவாகும். இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருமல் மருந்துக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.