ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரே இரவில் பெய்த கனமழையால், கிராமத்திற்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை, உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம், தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில், வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்தத் துயரச் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் மீண்டும் அடுத்தடுத்த மேகவெடிப்பு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.