Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தி நாளை முற்றுகை போராட்டம்!- அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தி  நாளை முற்றுகை போராட்டம்!- அன்புமணி ராமதாஸ்
, வியாழன், 27 ஜூலை 2023 (15:38 IST)
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  2 வது சுரங்கப் பணிகளுக்காக மேல்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில்  சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில்,  விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை  கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்!  நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக  வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தி வரும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர் மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்து ஈட்டிய  இலாபம் முழுவதையும் வட மாநிலங்களில் முதலீடு செய்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மக்களின் விருப்பமும், வலியுறுத்தலும் ஆகும். மக்களின் இந்த உணர்வுகளை மதித்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்பட்டு கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் இதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது.

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன்.

கடலூர் மாவட்ட உழவர்களையும், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அனைத்து அமைப்புகளும், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், தமிழ்நாடு உழவர் பேரமைப்பு உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!