தேசிய பாடலான 'வந்தே மாதரம்' குறித்து மக்களவையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, விவாதத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து ஆளும் பாஜகவை விமர்சித்தார். வந்தே மாதரம் இந்தியாவின் ஆன்மாவின் ஒரு பகுதி என்றும், அதற்கு இப்போது விவாதம் தேவையில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியின் உரையில் எதிர்கால இலக்குகளைவிட கடந்த காலம் பற்றிய பேச்சே அதிகம் இருந்ததாகவும், நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காகவே பாஜக இந்த விவாதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் பிரியங்கா குற்றம் சாட்டினார்.
மோடி தொடர்ந்து நேருவை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், நேருவின் பங்களிப்பால் உருவான நிறுவனங்களை மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
"உங்களுக்குத் தேர்தல் முக்கியம்; ஆனால், எங்களுக்கு இந்த நாடுதான் முக்கியம். நாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று அவர் கூறி, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு முயற்சிப்பதில்லை என்று விமர்சித்தார்.