பீகார் மாநில அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், ரயிலில் உள்ள ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்தபோது, டிக்கெட் பரிசோதகருடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிக்கெட் இல்லாத அந்த ஆசிரியை, டிக்கெட் பரிசோதகரை பார்த்து "நீங்கள் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்" என்று இந்தியில் குற்றம் சாட்டினார். அதற்கு டி.டி.இ. பதிலளிக்கையில், "உங்களிடம் டிக்கெட் இல்லை. நீங்கள் ஒரு பீகார் அரசு ஆசிரியர், ஆனாலும் டிக்கெட் இல்லாமல் பயணிக்கிறீர்கள். நீங்கள் ஸ்லீப்பர் கோச்சில் போக மறுக்கிறீர்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியபோது, ஆசிரியை டி.டி.இ-யைப் பார்த்து, "நீங்கள் உபயோகமற்றவர்" என்று கூறினார். அதற்கு டி.டி.இ. அமைதியாக, "நான் உபயோகமற்றவன் அல்ல, நீங்கள் தான். நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்துவிட்டு, என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்" என்று பதில் அளித்து, தான் கடமையைச் செய்வதாக தெரிவித்தார்.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் பலரும், அரசு பணியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து, கடமையை செய்யும் அலுவலரை விமர்சிப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.