பிகார் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கான வாய்ப்பும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு 10 நாள்களுக்கு முன் வரை பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்த்துக்கொள்ள முடியும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார். இதன்படி, வாக்காளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்யக் கால அவகாசம் கிடைத்துள்ளது.
பிகாரில் சுமார் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 7.42 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தயாராக உள்ளனர். முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 13-ஆம் தேதி தொடங்குகிறது.