கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாரில் சைடிஷ் சரியாக வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் பார் ஊழியர் ஒருவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று சிஜோ என்பவர் அந்த பாருக்கு மது அருந்த வந்துள்ளார். அங்கு பார் ஊழியர் ஹேமச்சந்திரன் அவருக்கு சைடிஷ் பரிமாறியுள்ளார். அப்போது, சைடிஷ் சரியாக வழங்கப்படாதது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த வாக்குவாதம் முடிந்த நிலையில், பார் நேரம் முடிந்தவுடன் ஹேமச்சந்திரன் பாரை மூடிக்கொண்டிருந்தார். அப்போது மீண்டும் திரும்பி வந்த சிஜோ, திடீரென கத்தியை எடுத்து ஹேமச்சந்திரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ஹேமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சிஜோவை போலீசார் கைது செய்து, காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கொலைக்கு வேறு ஏதேனும் பழைய பகை காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.