மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா பகுதியில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று பாறையின் கீழ் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, குழந்தையின் அழுகுரலை கேட்ட சிலர் அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இரவு நேரத்தில், அப்பகுதியில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே, அந்த பகுதியில் இருந்த மக்கள் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றனர். அங்கு, பூச்சி கடியை சகித்துக்கொண்டு, பாறையின் கீழ் குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் அழுதுகொண்டிருந்தது.
உடனடியாக அந்த குழந்தையை மீட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், குழந்தையின் தந்தை ஒரு அரசு பள்ளி ஆசிரியர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்ததால், நான்காவது குழந்தையை வளர்க்க முடியாது என கருதி, குழந்தையை பாறைக்கு அருகே அரைகுறையாக புதைத்துவிட்டு சென்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து, குழந்தையை கைவிட்ட பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.