பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்தியா மீதும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், தீவிரவாதிகளின் 9 முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்ட நிலையில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், அவர்களது ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உரிய விளக்கங்களை அளித்து வருகிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டம் வியோம்கா சிங் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்து வருகின்றனர்.
அதில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி “தீவிரவாதிகளை தண்டிக்கவே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. தீவிரவாத முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன. அவர்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. மோதலை அதிகரிக்கும் வகையில் தாக்குதல் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் “பயங்கரவாத நடவடிக்கைகளை எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K