ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் முக்தார் அஹ்மது மாலிக். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மாலிக்கின் மகன் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த தகவல் மாலிக்கிற்கு தெரிய வரவே, அதிர்ச்சியடைந்த அவர் மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை சில பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்தில் பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாலிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் இறுதிச்சடங்கிற்கு பங்கேற்க சென்ற தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.