சேலத்தில் 20 ஆயிரம் கட்டினால் புது பைக் தருகிறோம் என கூறி மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளான் ஒரு ஆசாமி.
மக்களிடம் கவர்ச்சிகரமாக ஆஃபர்களை காண்பித்து அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். சிட் ஃபண்ட்ஸ் நடத்தி மக்களை ஏமாற்றும் கும்பலை நாம் அன்றாடம் பார்க்கிறோம். பல வருடங்கள் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை, அற்ப வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கி சீரழிகின்றனர். ஆனால் இதையெல்லாம் பார்த்தும் கூட மக்கள் பலர் திருந்துவதாய் இல்லை.
சேலம் காந்தி ரோட்டில் ஜி.மார்ட் என்னும் நிறுவனத்தை நடத்தி வந்த கிருபாகரன் என்பவன் ரூ.20 ஆயிரம் கட்டினால் மோட்டார் சைக்கிள் தருவதாக கூறி ஊரெங்கிலும் விளம்பரப் படுத்தினான். இதனை பார்த்த மக்கள் பலர் அவனிடம் 20 ஆயிரத்தைக் கட்டினர். அவர்களுக்கு ஐஸ் வைக்க பல கவர்ச்சிக்கரமான சலுகைகளையும் அறிவித்தான்.
இதனால் சுற்றுப்பகுதிகளில் இருந்து பலர் இவனிடம் வண்டிக்காக பணம் கட்டினர். பல கோடி ரூபாய் கல்லா கட்டினான். ஆனால் நாட்கள் ஆகியும் சொன்ன மாதிரி வண்டி கொடுக்காததால், மக்கள் அவனிடம் போய் கேட்டனர். அவனும் இன்று வரும் நாளை வரும் என்று மக்களை இழுத்தடித்தான்.
சமீபத்தில் கிருபாகரன் குடும்பத்தோடு தலைமறைவானான். இதனால் அவனிடம் பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சியடைந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தற்பொழுது கலெக்டர் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.