உத்தர பிரதேச மாநிலம் கங்கா நகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு, கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கோடாப்பூர் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து கால்வாயில் வீசியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சிலை உள்ளூர் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்றும் கூறப்படுகிறது. விவசாய நிலத்திற்கு செல்லும் பிரச்சனைக்குரிய நுழைவு பாதையில் இந்தச் சிலை அமைந்திருந்ததாகவும், சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது.