ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் முன், ஆலய நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு, யாத்திரை ஆரம்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். அந்த அமைப்பில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் தேதி தொடர்பான அறிவிப்பு சில நேரம் முன்பு வெளியிடப்பட்டது.
இதன்படி, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தின் பல்டால் பாதை ஆகிய இரு வழிகளிலும் ஒரே நேரத்தில் யாத்திரை ஆரம்பமாகி, ஆகஸ்ட் 9ஆம் தேதி, ரக்ஷாபந்தன் தினத்தில் யாத்திரை நிறைவடையும்.
யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவதை கருத்தில் கொண்டு, பல்டால், பாகல்காம், நுன்வான் மற்றும் பந்தசவுக் ஆகிய இடங்களிலும் ஸ்ரீநகரிலும் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் 29ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற்ற புனித யாத்திரையில், 5.10 லட்சம் யாத்திரிகர்கள் பனியில் உருவான சிவலிங்கத்தை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.