ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவைகளை அணுகுவதில் அதன் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக புகார்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 நிமிடங்களாக, பிரபல சேவை குறைபாடுகளை கண்காணிக்கும் இணையதளத்தில் பெரும்பாலான பயனர்கள் ஏர்டெல் சேவைகளில் சிக்கல்களை சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். சில பயனர்கள் மொபைல் இணைய இணைப்பிலும், 'சிக்னல் இல்லை' என்றும் புகார் அளித்து வருகின்றனர்.
ஏர்டெல் பயனர்கள், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்திலும் தங்களால் அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பவோ முடியவில்லை என பதிவிட்டு வருகின்றனர். இந்த சிக்கல் குறித்த புகார்களுக்கு ஏர்டெல் நிறுவனம் பதிலளிக்க தொடங்கியுள்ளது.
பயனர்களின் புகார்களுக்கு பதிலளித்த ஏர்டெல் நிறுவனம், "தங்களது நெட்வொர்க்கில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்," என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், சேவை எப்போது முழுமையாக சரிசெய்யப்படும் என்ற காலக்கெடுவை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. இந்தத் திடீர் நெட்வொர்க் குறைபாடு, ஏர்டெல் பயனர்களிடையே பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.