குரு கிராம் செக்டார் 30 பகுதியில் உள்ள கெளரவ் விருந்தினர் விடுதி ஒன்றில், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பாதுகாப்புத் தணிக்கையாளரான, மும்பையை சேர்ந்த பிரஃபுல் சாவந்த் என்பவர் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று காலை உணவு முடித்து அறைக்கு திரும்பிய சாவந்த், மதிய உணவுக்கான பணத்தை UPI மூலம் அனுப்பியுள்ளார். ஆனால், மதிய உணவுக்கு அழைக்கையில் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. அறை உள்ளே பூட்டப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் கட்டிலில் சடலமாக கிடந்தார்.
உயிரிழந்த சாவந்த் காலையில் சாதாரணமாகவே காணப்பட்டதாகவும், தற்கொலை குறிப்பு எதுவும் அறையில் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான மர்மம் நீடிப்பதால், சிசிடிவி காட்சிகள் மற்றும் விடுதி ஊழியர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.