மலையாள நடிகர் திலீப், கேரளாவின் எர்ணாகுளம் சிவன் கோயில் விழா கூப்பன் விநியோக தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த நிலையில், சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த எதிர்ப்பு விழா ஏற்பாட்டு குழுவிற்குள்ளேயே எழுந்தது குறிப்பிடத்தக்கது.
2017-ஆம் ஆண்டு நடிகை மீதான பாலியல் வன்கொடுமை சதி வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டபோதும், ஆறு குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் நம்பிக்கை இழந்துள்ளதாக கூறிய சூழலில், இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதேபோல, திருவனந்தபுரத்தில் ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்தில் திலீப் நடித்த படம் திரையிடப்பட்டபோது, பெண் பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், நடத்துனர் அப்படத்தின் திரையிடலை நிறுத்தினார். பயணத்தின்போது பெண்கள் விரும்பாத படங்களை பார்க்கக் கட்டாயப்படுத்தக் கூடாது என அப்பெண் வாதிட்டதால், பேருந்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் நடிகர் திலீப் மீதான பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்வதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன.