ஜோத்பூர் பல்கலைக்கழக தேர்வில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் நிர்வாகி பூனம் பாட்டி முறைகேடு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூரில் உள்ள ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இந்தி இரண்டாம் செமஸ்டர் தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது, ஏபிவிபி பிராந்திய நிர்வாகியான பூனம் பாட்டி, தேர்வு அறையில் செல்போன் மூலம் பார்த்து எழுதியுள்ளார். இதைக்கண்ட கண்காணிப்பாளர், உடனடியாக அவர் மீது விதிமீறல் வழக்கு பதிவு செய்து, அவரது விடைத்தாளை பறிமுதல் செய்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூனம் பாட்டியை அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று என்எஸ்யுஐ ஜோத்பூர் மாவட்டத் தலைவர் பப்லு சோலங்கி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பல்கலைக்கழகத்திற்கு வெளியே இன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிப்பதாக என்எஸ்யுஐ குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சித் தலைவர் ஹனுமான் பெனிவால் இதுகுறித்து எக்ஸ் தளத்தில், "சட்ட அமைச்சர் ஜோகாராம் பட்டேலின் பேத்தி முறைகேடு செய்தது போல, இப்போது ஏபிவிபி-யைச் சேர்ந்த பூனம் பாட்டி முறைகேடு செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களை பாஜக மூடிமறைக்க முயற்சிக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.