உலகமெங்கிலும் இருந்து கேரளாவிற்கு 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
தற்பொழுது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி, மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் நேற்று சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளா பேரழிவைக் கண்டுள்ளது. இதனை சரி செய்ய கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என கூறினார்.
இந்த பேரழிவால் 14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்றும் அதில் தற்பொழுது வரை 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.
கடந்த 28-ந் தேதி வரை கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக உலகமெங்கிலும் இருந்து 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாகவும் கேரள மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என பினராயி விஜயன் கூறினார்.