சட்டீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரவுள்ள நிலையில், 23 பெண்கள் உட்பட 103 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.
சரணடைந்த 103 பேரில், 49 பேர்களுக்கும் சேர்த்து ரூ.1.06 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ், சரணடைந்த ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ₹50,000 வழங்கப்பட்டது.
இப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகவே இந்தக் கூட்டுக் சரணடைவு நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் அறிக்கையின்படி, "ஜனவரி 1, 2024 முதல், பீஜப்பூரில் மொத்தம் 924 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 599 பேர் சரணடைந்துள்ளனர் மற்றும் 195 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைகள் நக்சலைட்டுகளின் மன உறுதி படிப்படியாக குறைந்து வருவதையும், அதிகமானோர் சமூக வாழ்க்கைக்கு திரும்புவதை காட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை அதாவது அக்டோபர் 4ஆம் தேதி சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டு, கலாச்சார ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.