465 கோடி ரூபாய் ஆன்லைனில் மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த மோசடியில் கேரளாவை சேர்ந்த பிரபல டிராவல்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்யலாம் என்றும், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், குறைந்த வட்டியில் கடன் பெறலாம் என்றும் பல்வேறு விதமான ஆசைகளை காட்டி, கோடிக்கணக்கான மோசடிகள் நடந்து வரும் நிலையில், இந்த மோசடி கும்பலுக்கு இந்தியாவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகமது ஷரீப் என்பவர் கடந்த மாதம் புதுச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். லாரி டிரைவரான இவர், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து 465 கோடி ரூபாய்க்கு மேல் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது போலீசாருக்கு தெரிய வந்த போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, இந்த வழக்கை மேலும் விசாரணை செய்தபோது, மோசடி குழுக்களிடம் இருந்து 331 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது. மேலும், இந்த மோசடியில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக கேரளாவை சேர்ந்த பிரபல டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று தான் இந்த மோசடிக்கு மையப்புள்ளி என்றும் கூறப்படுகிறது.
அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் மற்றும் அந்த டிராவல்ஸ் மூலம் வெளிநாடு சென்றவர்கள் குறித்து விவரங்களை சைபர் கிரைம் போலீசார் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.