டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், இது குறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதல்வராகவும், ஆறு அமைச்சர்கள் கடந்த வாரம் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதாகவும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முன்னாள் முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக, "முதல்வரின் அலுவலகத்தில் அனைத்து பெரிய மனிதர்களின் புகைப்படங்களும் இருக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில் குற்றவாளியான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல முடியாததால் மலிவான அரசியல் தந்திரங்களை செய்து வருகிறார். தேர்தல் தோல்விக்கு பின்னர், முகத்தை காட்ட முடியாத அளவுக்கு அவரை மக்கள் அவமானப்படுத்திய உள்ளனர். இந்த மலிவான அரசியலை அவர் இன்னும் கைவிடவில்லை," என்று தெரிவித்துள்ளது.
மேலும், "டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத்சிங், மகாத்மா காந்தி, மோடி உள்பட அனைவரது புகைப்படங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்," எனவும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.