தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நிலையில், நேற்று போலவே, இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து, வாங்குவோருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வர்த்தகத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் என இரண்டு முறை விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று காலை, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. மாலையில் மேலும் ரூ.1,120 அதிகரித்து, ஒரே நாளில் மொத்தமாக ரூ.1,680 உயர்ந்தது.
இந்த உயர்வு காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.85,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கு விற்பனையாகிறது. தங்கத்துடன் போட்டியிடும் வகையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1-ம் அதிகரித்து, ரூ.150-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000 ஆக உயர்ந்துள்ளது.
நகை மதிப்பீட்டாளர்களின் கருத்துப்படி, வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.