Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ.பி.எஸ் VS திமுக VS அதிமுக... ராமநாதபுரம் யாருக்கு..? கள நிலவரம்...!!

Advertiesment
ramanadapuram

Senthil Velan

, செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (11:47 IST)
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படுவது ராமநாதபுரம் தொகுதி. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதனால் ராமநாதபுரம் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது.
 
மொத்த வாக்காளர்கள்:
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகளை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,97,012 பேர், பெண் வாக்காளர்கள் 8,08,955 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 83 பேர் என மொத்தம் 16,08,125 வாக்காளர்கள் உள்ளனர்.
 
தீர்க்கப்படாத பிரச்சினைகள்:
 
தொகுதியின் மிகப்பெரிய பிரச்சினையாக இன்றளவும் குடிநீர் பிரச்சினை உள்ளது. கடந்த 2010-ல் திமுக அரசால் ரூ. 616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தும், அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் தற்போது வரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது.
 
இம்மாவட்டத்தில் தொழிற்சாலை என்பதே இல்லை. அதனால்தான் இங்குள்ள இளைஞர்கள் நகரங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதிகளவில் வேலை தேடிச் செல்கின்றனர். இதுவரை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் எந்த தொழிற்சாலையையும் கொண்டு வரவில்லை.
 
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கு குடிநீர் பிரச்சினையும், வேலைவாய்ப்பின்மையும் தீரவில்லை. இந்தியா - இலங்கை நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் போன்ற தலையாய பிரச்சினைகள் நீண்ட காலமாக உள்ளன.
 
மேலும் உடான் திட்டத்தில் ராமநாதபுரத்தில் விமான நிலையம், மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி-தனுஷ்கோடி இடையே இன்னும் நான்கு வழிச்சாலை அமைக்காதது போன்றவை நீண்டகால குறைகளாக உள்ளன.
 
 
திமுக -  அதிமுக ஆதிக்கம்:
 
இந்த தொகுதியில் இதுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளன.  குறிப்பாக 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரான ரித்திஷும்,  2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளரான அன்வர் ராஜாவும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெற்றனர்.
 
2019-ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆதரவுடன் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,  ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 4.69 லட்சம் வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியது.  அக்கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி,  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1.27 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  காயிதே மில்லத் காலத்திலிருந்து தற்போது தலைவராக உள்ள காதர் மொகைதீன் காலம் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி,  திமுக-வுடன் சுமூகமான உறவை கடைபிடித்து வருகிறது.
 
2021 தற்போது நடைபெற உள்ள தேர்தலில் இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணியில் தற்போதைய எம்பியான நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 25 பேர் போட்டியிடுகின்றனர்.
 
வேட்பாளர்களின் பின்னணி:
 
webdunia
நவாஸ் கனி (திமுக) - ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கனி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். தொழிலதிபரான இவர் சென்னையை மையமாகக் கொண்டு கூரியர் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருகிறார்.
 
நவாஸ் கனி கடந்த முறை தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் மத்தியில் பெரிய அறிமுகம் இல்லாதவராக இருந்தார். இருப்பினும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக போட்டியிடுவதால் மக்களுக்கு அறிமுகமான நபராக இருக்கிறார்.
 
சிட்டிங் எம்பி ஆன நவாஸ் கனி தொகுதிக்கு பெரிய அளவில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி எம்பியாக இருந்ததால் எந்த திட்டமும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், பெரும் பலம்வாய்ந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நவாஸ் கனி.
 
webdunia
ஓ.பன்னீர்செல்வம் (சுயேச்சை) - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேனி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
 
ஓ.பி.எஸ் வெளியூரை சேர்ந்தவர் என்றாலும் ராமநாதபுரம் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. அவரது தேர்தல் பிரசாரங்களில் மக்கள் அதிகளவு வருவதை காண முடிகிறது. ஓ.பி.எஸ் முன்னாள் முதல்வர் என்பதால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த நட்சத்திர வேட்பாளராக வலம் வருகிறார். மேலும் அவருக்கு இத்தொகுதியில் சமுதாயரீதியான வாக்குகளும், பல தரப்பு மக்களும், அதிமுகவில் உள்ள ஒரு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

தனது அரசியல் எதிர்காலத்துக்கு இந்த தேர்தல் முக்கியமானது என்பதால் ஓபிஎஸ் வாக்குகளை பெறுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். மேலும் ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் பட்டாணி, வாளி, திராட்சை, கண்ணாடி கிளாஸ், கரும்பு விவசாயி ஆகிய தனி சின்னங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அவரது பெயரில் பலர் தேர்தலில் நிற்பதால் ஓ.பி.எஸ்-க்கு சற்று சறுக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 
 
webdunia
ஜெய பெருமாள் (அதிமுக) - அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெய பெருமாள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர். இவர் திமுக பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சகோதரர் விருதுநகர் மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
 
ஜெய பெருமாள் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.  பாரம்பரிய எதிர்க்கட்சி மற்றும் அதிமுகவின் கட்டமைப்பும் சின்னமும் அவருக்கு சாதகமாக உள்ளன. அவருக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் களமாடி வருகின்றனர். அரசியல் எதிரியான ஓபிஎஸ்ஸை தோற்கடித்தாக வேண்டும் என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதால் தொகுதியில் பிரச்சாரம் சூடு பறக்கிறது. 
 
webdunia
சந்திரபிரபா ஜெயபால் (நாதக) -  மீனவர் பிரச்சினை, தமிழர் உரிமை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, நட்சத்திர வேட்பாளர் ஓபிஎஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த ரேசில் பங்கேற்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்! – விண்ணப்பிப்பது எப்படி?