திமுக, அதிமுக செய்த ஊழல்களால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் ஆதரவு திரட்டினார்.
மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோயில் அருகில் இருந்து தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி, நகைக்கடை பஜார் வழியாக விளக்குத் துண் காவல் நிலையம் வரை சென்று இந்த ரோடு ஷோ நிறைவுற்றது. திறந்த வேனில் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாமரை சின்னத்தை காண்பித்தவாறு ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் இந்தமுறை அதிமுக, திமுக இரு கூட்டணியையும் 40 தொகுதிகளிலும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகம் வளர்ச்சி பெறாததற்கு திமுக அதிமுக செய்த ஊழலே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். மோடி தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளார் என்றும் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக மட்டுமே தமிழ் மற்றும் தமிழக வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறது என்று அமித்ஷா கூறினார். தமிழத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பறைசாற்றி வருபவர் பிரதமர் மோடி மட்டுமே என்று அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.